கிறிஸ்தவம் என்றால் என்ன?

கிறிஸ்தவம் என்பது மதமல்ல. அது வாழ்க்கை முறை, மனிதர்களின் வாழ்க்கை அன்பின் அடிப்படையில் அமைய வேண்டும், அனைவரும் சமாதானமாக வாழ வேண்டும் என்று தேவன் விரும்பினார். அதற்காகவே நாம் கடைபிடிக்கும்படி சில கட்டளைகளைக் கொடுத்தார். மனிதர்கள் தேவனிடத்தில் காட்டும் அன்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் (நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்புக்கூருவாயாக. உபாகமம் 6:4,5, திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. யாக்கோபு 1:27) பெற்றோரிடத்தில் (பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. எபேசியர் 6:1-3), மற்றவர்களிடத்தில் (பழிக்குப்பழி வாங்காமலும் உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக. லேவியராகமம் 19:18), சமுதாயத்தில் (விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள். சகரியா 7:10), நம்மை எவ்விதத்திலாவது துன்பப்படுத்துகிறவர்களிடத்தில் (நான் உங்களுக்கு சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். மத்தேயு 5:44), எப்படி இருக்க வேண்டும் என்பது முதற்கொண்டு பல காரியங்களில் பலவற்றையும் கூறியுள்ளார். இயேசு இவற்றைத் தம் சீஷர்களுக்கு போதித்து அவற்றை சகல ஜனங்களுக்கும் உபதேசிக்கக் கட்டளையிட்டுள்ளார்.

இயேசு கற்பித்ததன்படி வாழும் சமுதாயத்தில் அன்பு, பண்பு, கட்டுப்பாடு காணப்படும். தற்காலத்தில் சமுதாயத்தில் இந்த அன்பும் பண்பும் குறைந்து சுயநலம் மேலோங்கி நிற்கிறது. விரும்பினதை அடைவதற்கு வன்முறை வழியாய் இருக்கிறது. அன்பு இருக்க வேண்டிய இடத்தில் பகைமை இருக்கிறது; அநியாயமெல்லாம் நியாயமாகிறது.

இயேசு கட்டளையிட்ட வழிகளின் படி நாம் நடப்போமானால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். காவல் துறைக்கும், நீதிமன்றத்திற்கும் அவசியம் இருக்காது. இந்த சத்திய வழிகளைத்தான் கிறிஸ்தவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கின்றனர், தேவனுடைய துணையில்லாமல் மனிதர்களால் எதையும் செய்ய முடியாது என்பதால் இதற்காக ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகின்றன. இதனால் சமுதாயம் சீர்படுமேயன்றி சீரழியாது.  வாழ்ந்து பாருங்கள், உண்மை புரியும்.


– சகோதரி எமீமாள்