உமது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

நீர் இந்தப் பூமியில் பிறந்தபோது உம் பெற்றோர் பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் உமது பிறப்பைப் பதிவு செய்துள்ளார்கள். அத்துடன்,

  • நீர் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது
  • நீர் வேலையில் சேர்ந்தபோது
  • நீர் நிலம், வீடு வாங்கும்போது
  • நீர் வாகனங்களுக்கு உரிமம் செய்யும்போது
  • நீர் வங்கிகளில் கணக்கு துவக்கும்போது
  • நீர் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) வாங்கும்போது
  • நீர் வாக்காளர் அடையாள அட்டை பெறும்போது
  • உமது வீட்டிற்கு மின் இணைப்பு பெறும்போது

இவ்வாறாக இவ்வுலகில் ஆங்காங்கே உமது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அழிந்துபோகிற இவ்வுலகில் வாழ்க்கை நடத்த இவ்வளவு இடங்களிலும் உமது பெயர் பதிவு செய்யப்பட வேண்டுமானால் நீர் உமது மரணத்திற்குப் பின் என்றென்றுமாய் அழிவில்லாத நித்திய காலம் சொர்க்கம் அல்லது மோட்சத்தில் சமாதான சந்தோஷமாய் வாழ உமது பெயர் இப்போதே அங்கு பதிவு செய்யப்பட வேண்டாமா? ஆம். உமது பெயர் இப்போதே அங்கு பதிவு செய்யப்படத்தான் வேண்டும்.

அங்கு உம் பெயர் பதிவு செய்யப்பட நீர் செய்ய வேன்டியது என்ன? அதற்காகப் பரலோகத்திலுள்ள தேவனுடைய குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக நீர் பிறக்கவேண்டும். அதைக் குறித்தே பரிசுத்த வேதாகமத்தில், “ஆவருடைய (கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்) நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12) என நாம் வாசிக்கிறோம். கர்த்தராகிய இயேசுவை முழு இருதயத்தோடும் நீர் விசுவாசித்து, அவரை உம் சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டால் நீர் அவருடைய பிள்ளையாக மாற்றப்படுவீர். ஆகவே உம் பாவங்களுக்காக நீர் அடைய வேண்டிய தண்டனையைக் கல்வாரிச் சிலுவையில் ஏற்றுக்கொண்டு, உமக்காக மரித்தார். அவர் மரித்தது மட்டுமல்லாமல், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, என்றென்றுமாய் ஜீவிக்கிறார். உம் சிறுபிராயம் முதல் இது வரை செய்த, பாவங்களை நீர் மனஸ்தாபத்துடன் ஒவ்வொன்றாக அவரிடம் அறிக்கை செய்தால் அவர் உன் பாவங்களை மன்னித்து உம்மைத் தம் பிள்ளையாக ஏற்றுக்கொள்வார். உம் இருதயத்தைத் தம் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் அவர் நிறைப்பார். இவ்விதம் தம்முடைய பிள்ளைகளாக மாற்றப்பட்டவர்களிடம், இவ்வுலகில் இருந்தபோது, “உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” (லூக்கா 10:20) என்று அவர் கூறினார். கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து, பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறவர்களின் பெயர்கள் பரலோகத்தில் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், “தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்” (1 யோவான் 3:9) என்று வேதாகமம் கூறுவது போல, இப்படிப்பட்டவர்கள் இனிப் பாவஞ்செய்யாமல் இப்பாவ உலகில் தூய்மையாய் வாழ கர்த்தராகிய இயேசு அவர்களுக்கு அருள் செய்கிறார். மேலும் கர்த்தராகிய இயேசு கல்வாரிச் சிலுவையில் உமக்காக மரித்தப்போது உம் பாவங்களை மட்டுமல்லாமல், உம் வியாதிகளையும் சுமந்தார். எனவே அவரை விசுவாசிப்பவர்கள் தீராத வியாதிகள் இருந்தும் சுகம் பெற்று ஆரோக்யத்துடன் வாழலாம்.

இவ்வாறு இருக்க, பரலோகத்தில் தங்கள் பெயர்கள் பதிவு செய்யப்படாதவர்களின் முடிவு என்ன? மரணத்திற்குப் பின் உண்டாகும் நியாயத்தீர்ப்பின் நாளிலே அவர்களுக்குச் சம்பவிப்பத்தைப் பற்றி, “ஜீவ புஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே (நரக அக்கினியில்) தள்ளப்பட்டான்” (வெளிப்படுத்தின விசேஷம் 20:15) என்று கூறப்பட்டுள்ளது.

கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் உம் பாவங்களை நீக்கி மன்னிப்பையும், அவருடைய சிலுவையில் உன் சாபத்தை நீக்கி ஆசீர்வதியும், அவருடைய மரணம் உம் மரண பயத்தை நீக்கி தைரியத்தையும் அளிக்கிறது. கர்த்தராகிய இயேசிவின் ஜீவனாலே நித்திய ஜீவனையும் நீர் பெற்றுக்கொள்வீர். உமது பெயர் பூமியில் அல்ல, பரலோகத்திலுள்ள ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படும். இம்மையில் உலகம் கொடுக்கக்கூடாத மெய்யான சமாதானத்திலும் சந்தோஷத்திலும், மரணத்திற்குப் பின் பரலோகத்தில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றுக்கொள்ள இன்றே ஆண்டவராகிய இயேசுவிடம் வாரீர்! கர்த்தராகிய இயேசிவை விசுவாசித்துப் பின்வரும் ஜெபத்தைச் சொல்வீராக:

“ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை விசுவாசித்து என் ஜீவியத்தை முழுவதுமாக உமக்கு அர்ப்பணிக்கிறேன். என் பாவங்கள் நீங்க என்னை உம் தூய இரத்தத்தினால் கழுவி சுத்திகரித்து உம் பிள்ளையாக ஏற்றுக்கொண்டு, பரலோகத்தில் இப்போதே என் பெயரைப் பதிவு செய்தருளும். இனி என் வாழ்நாளெல்லாம் உம் பிள்ளையாகவே நான் ஜீவிப்பேன். ஆமென்”.


நன்றி: TPM

Advertisements

இரட்சிப்பு

இரட்சிப்பு என்றால் என்ன?

இரட்சிப்பு என்றால் காப்பாற்றப்படுதல்.


 

எதிலிருந்து காப்பற்றப்படவேண்டும்?

சாதாரணமாக, ஆபத்திலிருந்து, தோல்வியிலிருந்து, இயலாமையிலிருந்து, மனிதர்களிடத்தில் அடிமையாக இருப்பதிலிருந்து, தீயப்பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து காப்பாற்றப்படவேண்டும்.

வேதத்தின்படி, பாவத்திலிருந்து காப்பாற்றப்படவேண்டும்.


 

பாவம் என்று எதை சொல்கிறோம்?

தேவனுக்கு கீழ்படியாமல் இருப்பதும், தேவன் சொன்னதை மீறுவதும் பாவமாகும்

உதாரணம்: ஆதாம், ஏவாள் புசிக்கவேண்டாம் என்று சொன்ன பழத்தை புசித்து, தேவன் வைத்திருந்த ஒரு உன்னதமான திட்டத்தை குலைத்தார்கள். (ஆதி 2:9, 3:6, 3:11,17).


 

ஏன் இரட்சிக்கப்பட வேண்டும்?

ரோமர் 6:23 – பாவத்தின் சம்பளம் மரணம்


 

யார் பாவம் செய்தார்கள்?

ரோமர் 3:23 – எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களானோம்.


 

யார் பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும்?

இயேசு தான்.

ஆதாரம்: மத்தேயு 1:21, அப்போஸ்தல நடபடிகள் 4:12


 

ஏன் இயேசுவால் மட்டுமே இரட்சிக்க முடியும்?

இயேசு பரிசுத்தர், அவர் பாவம் செய்யவில்லை – Iபேதுரு 2:22

அவரே பாவங்களை மன்னிக்க அதிகாரத்தை உடையவர் – மத்தேயு 9:6


 

யார் இரட்சிக்கப்படுவார்கள்?

கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிறவர்கள் – யோவேல் 2:32

விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவர்கள் – மாற்கு 16:16


 

இயேசு எப்படி இரட்சிக்க முடியம்?

  • ஏசாயா 53:5
  • அவர் பாடு அனுபவித்ததால் பாவத்தின் தண்டனையிலிருந்து நம்மை தப்புவிக்கிறார்.
  • அவர் மரித்ததால் நம் பாவத்தின் சம்பளமாகிய மரணத்தைத் தாம் ஏற்றுக் கொண்டார்.
  • அவர் உயிர்தெழுந்ததால் மரணத்தை ஜெயித்தார். அதனால், அவர் நமக்கு நித்திய ஜீவனைத் தருகிறார்.

 

நாம் இரட்சிக்கப்பட்டால்…

  • பாவ மன்னிப்புப் பெற்றுக் கொண்டு தண்டனையிலிருந்து விடுதலை
  • மேற்கொண்டு பாவம் செய்யாத, பாவமில்லா வாழ்க்கை
  • முடிவிலே நித்திய ஜீவன்
  • இம்மையில் சமாதானமான, ஆசீர்வாதமான வாழ்க்கை
  • இயேசு தமது ஜீவனைத் தந்து சவதரித்த ஆசீர்வாதங்கள்:
  1. தண்டனை ஏற்றுக்கொண்டார் – நாம் மன்னிப்பு பெற
  2. காயப்பட்டார் – நாம் சுகம் பெற்றுக்கொள்ள
  3. பாவமானார் – நம்மை நீதிமானாக்க
  4. மரித்தார் – நமக்கு நித்திய ஜீவனை கொடுக்க
  5. வறுமையில் வாழ்ந்தார் – நாம் செழிப்படைய
  6. அவமானத்தை ஏற்றுக்கொண்டார் – நாம் அவருடைய மகிமையில் பங்கு பெற
  7. கைவிடப்பட்டார் – நம்மை தேவனோடு ஒப்புறவாக்க
  8. சாபமானார் – நாம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள

 

நாம் இரட்சிக்கப்படாவிட்டால்…

  • பாவ வாழ்க்கையால், அழிவு
  • பாவம் மன்னிக்கப்படாத்தால், ஆக்கினைத்தீர்ப்பு
  • துன்பம் நிறைந்த நிச்சயமற்ற, தடுமாறும் வாழ்க்கை
  • தோல்வி நிலை
  • மரணம்

எது தெய்வம்?

இந்த உலகில் மனிதர்களாகிய நம்முடைய சுபாவம் எப்படியென்றால், அன்றாடம் செய்கிற காரியங்களை எந்த கேள்வியோ, மறுப்போ இன்றி ஏற்றுக்கொள்வோம். ஆனால், வழக்கமல்லாத காரியம் என்றாலோ நமக்கு சந்தேகங்கள் வரும், கேள்விகள் எழும். அது என்னவென்று யோசித்து பார்க்கும்போதுதான் பல உண்மைகள் வெளிப்படும்.

Continue reading

நாம் ஏன் பிறந்தோம்?

இந்த பூமி தேவனால் படைக்கப்பட்டது. மனிதர்களாகிய நாம் அவருடைய மகிமைக்காக உருவாக்கப்பட்டோம். தேவன் நியமித்தக் காலம் வரை நாம் தேவனுக்கு மகிமை செலுத்தி அவர் சித்தத்தின்படி வாழ்ந்து, காலம் வரும்போதோ அவரை சென்றடைவோம். தேவ சந்ததி உருவாவதற்காகப் படைக்கப்பட்ட மனிதன் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டதால் தேவத் திட்டம் தகர்க்கப்பட்டு பூமி சபிக்கப்பட்டது. மனிதர்களிடையே பாவம் பெருகிற்று. அவர்கள் தேவனை மறந்தார்கள்.

தேவன் யார் என்பது அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்படாததால் மனிதர்கள் தாங்களாக சில உருவங்களைப் படைத்து தங்கள் மனவிருப்பத்தின்படி தெய்வங்களை உருவாக்கிக் கொண்டார்கள். மனிதர்களைப் படைத்தது தெய்வமாகலாம். மனிதர்கள் படைத்தது தெய்வமாகுமோ? தேவன் காட்டின வழியை மறந்து மனிதர்கள் தங்களுக்கென்று பலப்பல வழிகளை ஏற்படுத்திக் கொண்டு மனம்போனப் போக்கில் வாழ்ந்ததினாலேயே உலகத்தில் இத்தனை வேதனைகளும், துன்பங்களும் உண்டாயின. அதன் விளைவாக பாவங்களும், சாபங்களும் வந்தன. இதை ஜனங்கள் உணராமலும், உணர்ந்தவர்கள் அவற்றிலிருந்து விடுபட வழி தெரியாமலும் இருக்கிறார்கள்.

தெய்வங்களைக் கற்பனையில் உருவாக்கியது போலவே பாவ, சாபங்களிலிருந்து விடுபடக் கற்பனை வழிகளை உருவாக்கிக் கொண்டு அவற்றைப் பின்பற்றுவதால் விடுதலை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர். அவர்கள் படைத்த தெய்வம் எப்படி உண்மையானதில்லையோ அப்படியே பரிகாரம் என்ற பெயரில் அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட வழிமுறைகளும் உண்மையானவை அல்ல. அவற்றினால் விடுதலை கிடைக்காது. உண்மையான தெய்வத்தை இனங்கண்டு கொண்டு அவர் காட்டிய வழிகளில் நடந்தால் மட்டுமே பாவ, சாபங்களிலிருந்து விடுதலை பெற முடியும். உண்மையான தெய்வம் எது என்று எப்படி அறிவது, அவர் காட்டிய வழி எது? தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

ஆதியிலே இந்த பிரபஞ்சத்தைப் படைத்த தேவன், பூமியை குடியிருப்புக்கேற்றபடிப் படைத்தார். மனிதனைத் தன் சாயலில் படைத்து, பூமியையும், பூமியிலுள்ள யாவற்றையும் ஆண்டுகொள்ள அதிகாரம் தந்தார். மனிதனோடு தேவன் உலாவி, அவனோடு பேசி உறவாடினார். ஆனால், சாத்தானால் மனிதன் வஞ்சிக்கப்பட்டு தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனதால் தேவனோடு இருந்த தெய்வீக உறவை இழந்தான். தேவன் தனக்குத் தந்த மகிமையையும் இழந்தான்.

மனிதனைப் படைத்ததற்காக தேவன் மனஸ்தாபப்பட்டாலும் அவனை அழிக்க விரும்பாமல், தம் சித்தத்தை நிறைவேற்றத் தனக்கென ஒரு குறிப்பிட்ட ஜனத்தைத் தெரிந்து கொண்டார். இவர்களே இஸ்ரவேல் ஜனங்கள் எனப்பட்டனர். இவர்களுக்கென்று ஒரு தேசத்தைக் கொடுத்து செழிப்பாக வாழவைத்தார். ஆனால், இந்த உலகம் பாவ உலகமானதால் அவர்களும் பாவத்திற்கு அடிமையாகி தேவனை மறந்து, அவரை விட்டு விலகி துன்பத்தை அனுபவித்தனர். ஜனங்களின் துன்பங்களைக் கண்ட தேவன் அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டு மீண்டும் தம்மோடு ஒப்புரவாக்கிக் கொள்ளும்படி தமது பரிசுத்த ஆவியைக் கொண்டு இயேசுவை மனிதனாகப் பிறக்க வைத்தார்.

இயேசு மனிதனாக இந்த பூமியில் இருந்த நாட்களில் ஒரு மனிதன் எப்படியாக வாழ வேண்டுமென்று தேவன் விரும்பினாரோ அப்படியே வாழ்ந்தார். ஆனால், இஸ்ரவேல் ஜனங்களோ தேவன் காட்டிய வழியை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டதுமல்லாமல் இயேசுவையும் மறுதலித்தனர். எந்த ஜனங்கள் கெட்டுப்போகக் கூடாதென்று இயேசு பூமிக்கு வந்தாரோ அவர்களாலே பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிலுவையில் மரித்தார்.

மனிதனாக வாழ்ந்த போது மரித்து நான்கு நாட்களாகிப் போன மனிதனை உயிரோடு எழுப்பினவருக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியும். ஆனால், தேவனின் திட்டம் நிறைவேறத் தன்னை ஒப்புக் கொடுத்து, நம் பாவங்களை, சாபங்களைத் தான் ஏற்றுக் கொண்டு பாடனுபவித்து சிலுவையில் மரித்தார்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். மரித்த மனிதர்கள் யாரும் மீண்டும் உயிரோடு எழுந்ததில்லை. ஆனால், இயேசு தேவனானபடியால் உயிர்த்தெழுந்தார்.

சிலுவை மரணத்திற்குத் தான் ஒப்புக்கொடுக்கப்படுவதையும், மீண்டும் உயிர்த்தெழுவதையும் தம் சீடர்களிடத்தில் இவை நடப்பதற்கு முன்னதாகவே தெரிவித்திருந்தார். அதன்படியே மரித்துப் பின், உயிர்த்தெழுந்த அவர் இன்றும் ஜீவனோடு நம்முடனே இருக்கிறார்; நம் ஒவ்வொருவரோடும் இருக்கிறார். அவரே நமக்கு பாவப்பரிகாரியாக இருக்கிறார்.

பிற உயிர்களை பலியிடுவதோ, தான தர்மங்களை செய்வதோ, பாதயாத்திரை செல்வதோ அல்லது நதியில் மூழ்கி எழுவதோ பாவத்திற்கு பரிகாரமாகாது; அதனால் விடுதலை பெறவும் முடியாது. நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற ஒரே வழி இயேசுவே.

அதுபோல சாபங்கள் பல வழிகளில் வரும். சாபத்தினால் வியாதிகளும், வறுமையும், தோல்விகளும், சமாதானமற்ற நிலையும் வரும். இவற்றை நாம் அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்ற நிலை இல்லை. காரணம், இயேசு சாபங்கள் எல்லாவற்றையும் தான் ஏற்றுக்கொண்டு சிலுவையிலே அவற்றை ஜெயித்துவிட்டார். அதனால் அவரை நாம் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது நம் சாபங்கள் நீங்கும். பாவங்களை மன்னிக்கவும் சாபங்களைப் போக்கவும் அவருக்கு அதிகாரமும் வல்லமையும் உண்டு. மற்ற எந்த வழிகளிலும் பாவமோ சாபமோ நிவர்த்தியாவது இல்லை. இதுதான் உண்மை.

இயேசு ஒரு தாயின் பரிதவிப்போடு தம் பிள்ளைகளைத் தம்மோடு சேர்த்துக் கொள்ள மனதாயிருக்கிறார். தான் படைத்த அத்தனை ஜனங்களையும் நரகத்தினின்று மீட்கக் காத்திருக்கிறார். நாம் நரகத்திற்குத் தப்பித்துக்கொள்ள ஒரே வழி இயேசுவை விசுவாசித்து ஏற்றுக் கொள்வதுதான்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே மோட்சம் செல்லத்தான் ஆசை. அதை அடைவதற்கு நாம் எங்கும் செல்ல வேண்டியதில்லை, எதையும் செலவு செய்ய வேண்டியதில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே – இருக்கிற இடத்திலேயே முழந்தாள் படியிட்டு தேவனை நோக்கி வேண்டிக்கொள்ள வேண்டும். சிறுவயதுத் தொடங்கி நாம் அறிந்தும், அறியாமலும் செய்தத் தவறுகளை சொல்லி தேவனிடத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

நாம் அவரிடம் உண்மையாக மனம் திரும்பி மன்னிப்புக் கேட்கும்போது உடனடியாக தேவன் நம்மை மன்னிப்பார். மீண்டும் தவறுகள் செய்யாதபடி வேண்டிக்கொண்டு ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழத் தயாராக வேண்டும். இது நம்மால் முடியாது. ஆனால் நமக்கு உதவும்படி தேவனிடத்தில் வேண்டிக் கொண்டால் அவர் நமக்கு உதவி செய்வார். நம்மைக் கரம் பிடித்து வழிநடத்துவார். அவரே நம் வாழ்க்கையைப் பொறுப்பெடுத்துக் கொள்வார்.

நாம் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டால் என்ன நடக்கும்?

     நம் பாவங்கள் மன்னிக்கப்படும், சாபங்களிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற முடியும். மறுமையில் தேவனோடு வாழலாம்.

இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன நடக்கும்?

 நம் பாவங்கள் மன்னிக்கப்படாததால் பாவத்திற்குத் தக்க தண்டனை நிச்சயம் உண்டு. மரணத்திற்குப் பிறகு தேவனிடத்தில் சேர்வதற்கென்றே படைக்கப்பட்ட நாம் தேவனை சென்றடைய முடியாது.

இவை அனைத்தும் உண்மை. ஒன்று கூட பொய்யில்லை. ஏற்றுக் கொள்பவர்கள் இந்த பூமியிலேயே தேவனோடு வாழத் தயாராகுங்கள்.

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை – அப்போ. 4:12.

கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் – யோவேல் 2:32

விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் – மாற்கு 16:16

பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள் – ஏசாயா 45:22