இந்த உலகில் மனிதர்களாகிய நம்முடைய சுபாவம் எப்படியென்றால், அன்றாடம் செய்கிற காரியங்களை எந்த கேள்வியோ, மறுப்போ இன்றி ஏற்றுக்கொள்வோம். ஆனால், வழக்கமல்லாத காரியம் என்றாலோ நமக்கு சந்தேகங்கள் வரும், கேள்விகள் எழும். அது என்னவென்று யோசித்து பார்க்கும்போதுதான் பல உண்மைகள் வெளிப்படும்.
(ஆங்கில பதிப்பிற்கு – For English Version)
தெய்வமென்று வரும்போதும் நாம் இப்படித்தான் இருக்கிறோம். எல்லாவற்றையும் பகுத்தறிகிற நாம் நம்மைப் படைத்த கடவுளைப் பற்றி யோசிக்கிறதில்லை. காலம் காலமாக செய்து வருகிற வழிபாடுகளில் நமக்கு சந்தேகம் எழுவதும் இல்லை. ஆதலால், கண்ணை மூடிக்கொண்டு அவற்றை அப்படியே பின்பற்றுகிறோம். ஆனால், அதை சரியான முறையில் பகுத்தறிகிற பொழுது நம்முடைய அறியாமையும், தவறுகளும் தெரியவரும்.
நம்முடைய வழிபாடுகளும், வழிபாட்டு முறைகளும் சரிதானா? நம்மை சிருஷ்டித்தது தெய்வமா? நம்மால் சிருஷ்டிக்கப்பட்டது தெய்வமா? இவற்றையெல்லாம் நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா? எது தெய்வம்? அந்த தெய்வத்தின் இலக்கணம் தான் என்ன? சற்றே பார்ப்போம்.
தெய்வமென்றால் உலகத்தையும், உலகத்திலுள்ள யாவற்றையும் படைத்ததாக இருக்க வேண்டும். நாம் படைத்தது தெய்வமாக இருக்க முடியாது. (ஆதாரம்: பரிசுத்த வேதாகமம் – ஆதியாகமம் 1)
தெய்வமென்றால் தான் படைத்ததைக் காக்க வேண்டும் (ஜீவராசிகள்), இயக்கவேண்டும் (இயற்கை சக்திகள்). நாம் படைத்து அதை நாமே பராமரிப்பது தெய்வமாக இருக்க முடியாது. (ஆதாரம்: பரிசுத்த வேதாகமம் – சங்கீதம் 104)
தெய்வமென்றால் அது ஒன்றாகத் தான் இருக்க முடியும். பலப்பலவாக இருக்க முடியாது. (ஆதாரம்: பரிசுத்த வேதாகமம் – ஏசாயா 45:5,7,12)
தெய்வமென்றால் அது எல்லோருக்கும் ஒரே தெய்வமாகத்தான் இருக்க முடியும். ஒவ்வொரு ஜாதி, இனம், தேசத்திற்கென்று தெய்வம் தனித்தனியாக இருக்க முடியாது. (ஆதாரம்: பரிசுத்த வேதாகமம் – ஏசாயா 45:18,22,23)
தெய்வமென்றால் அது நீதியுள்ளதாக இருந்து, நியாயமானவற்றிற்கு மட்டுமே துணைபோகும்; அநியாயத்திற்கு துணைபோவது தெய்வமாக இருக்கமுடியாது. (ஆதாரம்: பரிசுத்த வேதாகமம் – ஏசாயா 1:11-20, சகரியா 8:16,17)
பரிசுத்தமாக இருப்பதுதான் தெய்வம். மனைவிகள், பிள்ளைகள் என்று குடும்ப உறவுகள் உள்ளதெல்லாம் தெய்வமாக இருக்க முடியாது. (ஆதாரம்: பரிசுத்த வேதாகமம் – லேவியராகமம் 19:2)
இவை தான் தெய்வத்திற்கு உண்டான இலக்கணம். இதை பரிசுத்த வேதாகமத்தில் மேற்குறிப்பிட்டுள்ள அதிகாரங்களில் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் கர்த்தரே தெய்வமென்பதை அறியலாம்.
பரிசுத்த வேதாகமம் உண்மையானது என்பதை எப்படி அறிந்து கொள்வது?
பிற மத நூல்களில் சொல்லப்படாத படைப்பின் இரகசியங்கள் பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதாவது கர்த்தர் இந்த உலகத்தையும் அவற்றில் உள்ள யாவற்றையும் படைத்தது, வானத்திலும் பூமியிலும் அவருக்கு இருக்கிற வல்லமை, அதிகாரம் இவைகளும், ஆதி மனிதன் முதல் ஜனங்களின் வம்சாவளிகள், அவர்களுடைய காலங்கள், வேதக்காலத்து சமகால இராஜாக்கள், அவர்களுடைய இராஜ்ஜியங்கள், வரலாற்று நிகழ்வுகள் ஆகியவைகளும் சொல்லப்பட்டுள்ளன. (இவைகள் புனைகதைகள் என்றால் வம்சாவளிகளையும், காலங்களையும் சொல்ல முடியாது; இதில் வரும் வரலாற்று சம்பவங்களை புனைகதைகள் என்று ஒதுக்கித் தள்ளமுடியாது)
மேலும், பரிசுத்த வேதாகமம் வேறு வேறு காலங்களில் வாழ்ந்த மனிதர்களால் எழுதப்பட்டு, தொகுக்கப்பட்டது என்றாலும் அவை ஒன்றாகிலும் மாறுபட்டு இல்லை. ஏனென்றால், வேதம் தேவனால் அருளப்பட்டு தேவ மனிதர்களைக் கொண்டு எழுதப்பட்டது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்பொழுது கர்த்தரே நம்மை உண்டாக்கினார் என்று அறியமுடியும்.
இயேசுவே கர்த்தர். அவரே தெய்வமென்பதற்கு சாட்சி, பரிசுத்த வேதாகமும், இந்து வேதங்கள் என்று சொல்லப்படுகின்ற ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களும், உபநிஷதங்களும். எப்படியென்றால், பரிசுத்த வேதாகமத்தில் தேவன் ஆதியிலே உலகத்தைப் படைத்தது முதல் உலகின் முடிவில் நடக்கப் போவது வரை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கூறப்பட்டுள்ளவை எல்லாம் சரித்திர சம்பவங்கள்; காலத்தை அடிப்படையாகக் கொண்டது. உண்மையன்றி வேறில்லை; உண்மைக்குப் புறம்பானது ஒன்றுமில்லை. உதாரணமாக, வானவில் தோன்றியதின் காரணத்தை ஆதியாகமம் 6,7,8,9 அதிகாரங்களில் காணலாம். தற்பொழுது நடந்து வரும் நிகழ்வுகள் யாவும் மத்தேயு 24ல் சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல, இந்து வேதங்களில் கூறப்பட்டுள்ள சில காரியங்கள் இயேசுவையே குறிக்கிறது என்பதை சில சான்றுகள் மூலம் அறியலாம். உதாரணமாக, பாவ மன்னிப்பு அல்லது மீட்புக்கென்று இரத்தம் சிந்தப்படுவது மட்டுமே ஒரே வழி என்று உபநிஷதமும், மனுகுல மீட்பென்பது தெய்வத்தின் வழியாகத்தான் வரும் என்று சாமவேதமும் சொல்கிறது. ஆக, மனிதகுலத்திற்கென்று தெய்வமே பலியாக வேண்டும் என்று வேதங்களிலும், உபநிஷதங்களிலும் சொல்லப்பட்டுள்ள இந்த காரியம் இயேசு நம் பாவங்களுக்காக மரித்ததை உறுதிப்படுத்துகிறது.
இயேசுவை நாம் ஏன் தேட வேண்டும்?
கர்த்தரே நம்மை உண்டாக்கினதால், நாம் அவரைத் தேடவேண்டும். இந்த உலகத்தின் பொல்லாப்புக்கு நாம் தப்புவிக்கப்பட, எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காக்கப்பட, நீதியின் பாதையில் நடக்க, சமாதானமில்லாத இந்த உலகில் நிம்மதியாய் வாழ, நரக, பாதாளங்களுக்குத் தப்புவிக்கப்பட, மரண பயமின்றி வாழ, நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டு தேவனோடு சேர நாம் கர்த்தரைத் தேட வேண்டும். ஏனென்றால், நாம் தேவனோடு சேரவே படைக்கப்பட்டோம்.
இயேசு ஏன் இந்த பூமியில் பிறக்கவேண்டும்? ஏன் மரிக்கவேண்டும்?
படைத்த தேவனையே மறந்து விட்ட நம்மை தேவனோடு ஒப்புரவாக்கவே இயேசு தேவனுடைய குமாரனாக இந்த பூமியின் மையப்பகுதியில் பிறந்தார். பாவத்திற்கு சம்பளம் மரணம் என்று வேதம் கூறுகிறது. நம்முடைய பாவங்களால் நாம் நித்திய மரணத்திற்குள்ளாகாதபடிக்கு நமக்கு ஜீவனைக் கொடுக்கவே இயேசு நம் பாடுகளை அவர் ஏற்றுக்கொண்டு மரித்தார். உலகில் மரித்த யாரும் உயிர்த்தெழுந்ததில்லை. ஆனால், இயேசு தேவன் என்பதால் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
இயேசு பாடுகள் அனுபவித்து, சிலுவையில் மரித்து, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததின் மூலம் உலகத்தின் தீங்கானவைகள் எல்லாவற்றின் மேலும் அவர் வெற்றி சிறந்தார். அதனாலேயே, நாம் அவரை விசுவாசிக்கிறபொழுது அவர் சிலுவையில் பெற்றுத் தந்த விடுதலையை நாம் பெற்றுக்கொண்டு உலகத்தின் தீங்கானவற்றிற்குத் தப்புவிக்கப்படுகிறோம். எப்படியெனில்,
- நம்முடைய பாவங்களை அவர் தாமே ஏற்று கொண்டதால் நாம் மன்னிப்பு பெற்றுக் கொள்கிறோம்.
- நம்முடைய சாபங்களை அவர் தாமே ஏற்று கொண்டதால் நாம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்கிறோம். (நம் பாவங்களை மன்னிக்கும் அதிகாரமும் சாபங்களைப் போக்கும் வல்லமையும் அவர் ஒருவருக்கே உள்ளது).
- நம்முடைய பலவீனங்களை, வியாதிகளை அவர் சிலுவையில் ஏற்று கொண்டதால் நாம் சுகத்தைப் பெற்றுக் கொள்கிறோம்.
- நம்முடைய பாடுகளை, துக்கங்களை அவர் சுமந்து கொண்டதால் நாம் சந்தோஷமும் விடுதலையும் பெற்றுக்கொள்கிறோம்.
இவை யாவும், இயேசுவே நம்மைக் காக்கிறவர் என்றும், அவரால் மட்டுமே நமக்கு இரட்சிப்பு உண்டு என்றும் விசுவாசிப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும்.
இது வெறும் செய்தியல்ல. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவரவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுதலை பெற உதவும் நற்செய்தி. இது தேவன் நமக்குக் காட்டிய வழி. அதை விடுத்து நாமாக உருவாக்கிக் கொண்ட வழிகளால் மெய்யாக நாம் விடுதலை பெற முடியாது. இதுவே உண்மை. இந்த உண்மையை விசுவாசித்து ஏற்று கொள்கிறவன் பாக்கியவான்.
இயேசுவால் அன்றி இரட்சிப்பு இல்லை!
இயேசுவால் அன்றி விடுதலை இல்லை!!
– சகோதரி எமீமாள்