செவந்த்-டே அட்வென்டிஸ்ட்

இந்த உலகத்தைப் படைத்த தேவன் ஒருவரே. தேவன் மனிதனுக்குக் கட்டளையிட்ட வழியும் ஒன்றே. தேவன் கொடுத்த வேதமும் ஒன்றே. அந்த வேதத்தைப் புரிந்துகொள்வதில்தான் மனிதர்களுக்குள் எத்தனை முரண்பாடு? இந்த முரண்பாடான கருத்துகளினால் நாம் தேவன் காட்டிய வழியை விட்டு விலகி நடக்கிறோம். அதனால் கிறிஸ்தவர்களுக்குள்தான் எத்தனை பிரிவுகள்?  தேவன் யார் என்பதை அறியாததினால் இந்துக்கள் தாங்கள் விரும்பியபடி தங்களுக்கு தெய்வங்களைப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேதத்தை முழுமையாக வாசிக்காததால் அல்லது புரிந்து கொள்ளவேண்டிய விதத்தில் புரிந்து கொள்ளாததினால் கிறிஸ்தவர்களுக்குள் எத்தனை பேதங்கள்?

பிதா மட்டும் தான் தேவன் என்று ஒரு சாராரும், இயேசு மட்டும் தான் தேவன் என்று ஒரு சாராரும், பரிசுத்த ஆவி இல்லை என்று ஒரு சாராரும், இயேசுவைப் பெற்ற மரியாளே தெய்வம் என்று ஒரு சாராரும் நம்பிக்கை வைத்து தேவனுக்கு உகந்ததல்லாத வழிகளில் நடக்கிறோம்.

இவை எல்லாவற்றையும் விட, தேவன் பல நியாயப்பிரமாணங்களை கொடுத்திருக்க, அந்த நியாயப்பிரமாணங்களில் ஒன்றான பத்துக் கட்டளைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதிலும் நான்காம் கட்டளையான ஓய்வு நாளை ஆசரிக்கும் கட்டளையை மாத்திரம் பிரதானப்படுத்தி ஒரு பிரிவினர் செவந்த்-டே அட்வென்டிஸ்ட் என்ற பெயரில் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றனர்.

இவர்கள் சனிக்கிழமையை ஓய்வு நாளாக ஆசரித்து வருகின்றனர். இந்த நாளில் அவர்கள் தேவனை ஆராதிப்பது தவிர மற்ற எந்த வேலையும் செய்யமாட்டார்கள். இவர்கள் வேதத்தை முழுமையாக வாசிக்கவுமில்லை சரியானபடி புரிந்துகொள்ளவுமில்லை என்றே தோன்றுகிறது. தன் ஜனமும், தன் ஜனத்தாரின் அடிமைகள், வேலைக்காரரோடு மிருக ஜீவன்களும் ஓய்ந்திருக்கவேண்டும் என்பது தாயுள்ளம் கொண்ட தேவனின் கட்டளை. ஜனங்கள் இந்த கட்டளையின் நீதியான இரக்கத்தை விட்டுவிட்டு கட்டளையை கண்மூடித்தனமாகப் பின்பற்றினார்கள். அதாவது ஓய்வு நாளில், துன்பம் அனுபவிப்பவர்களுக்கு உதவி செய்வது கூட தவறு என நினைத்தனர். அதனாலேயே அந்த கட்டளையை தேவன், இயேசுவைக் கொண்டு மாற்றி அதை பரிசுத்த நாளாக்கினார்.

நமக்கு எதிரிடையாகவும், கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின் மேல் ஆணி அடித்து, அவைகளின் மேல் இயேசு சிலுவையிலே வெற்றி சிறந்தார். ஆகையால், போஜனத்தையும், பானத்தையும் குறித்தாவது, நாளையும், மாதப்பிறப்பையும், ஓய்வு நாட்களையும் குறித்தாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக என்று வேதம் சொல்கிறது. ஆக, தேவன் செய்தததையும் அவர் தம் சீடர்கள் மூலமாக சொன்னதையும் விட்டு விட்டு, ஒரு சாதாரண மனுஷி (எலான். ஜி. வைட்) சொன்னதை நம்பி அதைப் பின்பற்றுவதென்பது நாம் தேவனை மறுதலிக்கிறது போலாகும். இது தேவனை அவமதிக்கிற செயல்.

ஓய்வு நாள் கட்டளையைக் கொடுத்த தேவன், ‘நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே’ என்று வேதனைப்பட்டு சொன்னதை எரேமியாவில் வாசிக்கிறோமே.

இயேசு ஊழியம் செய்த நாட்களிலே, ஒரு ஓய்வு நாளின்போது, கூனியாயிருந்த ஒரு ஸ்திரீயை குணமாக்கினதை ஜெப ஆலயத் தலைவன் எதிர்த்தான். அப்பொழுது கர்த்தர் அவனிடத்தில், ‘சாத்தான் பதினெட்டு வருஷமாகக் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வு நாளில் இந்த கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில்லையா’ என்றார். அவர் அப்படி சொன்னபொழுது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

மேலும், இயேசு வேறொரு ஓய்வு நாளில் வயல்வெளி வழியாகக் கடந்து போகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து கைகளினால் நிமிட்டித் தின்றார்கள். இது குறித்து பரிசேயர் அவரிடத்தில் கேட்டப்பொழுது இயேசு அவனை நோக்கி, ‘மனுஷன் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வு நாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது. பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். மனுஷக்குமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார்’ என்று சொன்னதையும் நாம் கவனித்தாக வேண்டும்.

ஓய்வுநாளைக் கட்டாயமாக ஆசரித்த வேதபாரகர், பரிசேயர் இவர்களைக் குறித்து இயேசு சொல்கையில், ‘வேதபாரகர், பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்” என்று கூறியுள்ளார். அப்படியானால், ஓய்வுநாளை ஆசரிப்பதைக்காட்டிலும் மேலான ஒன்றையே தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். அந்த மேலான ஒன்று என்ன?

நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை; ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லது என்று அறிந்திருக்கிறோம். நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல் அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தி இல்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைப்பாதகருக்கும், வேசிக்கள்ளருக்கும், ஆண் புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்ற எந்த செய்கைக்கும் விரோதமாக விதிக்கப்பட்டிருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது.

அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கம்தான் என்ன? வாக்குத்தத்தைப் பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களின் நிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவ தூதரைக் கொண்டு மத்தியஸ்தன் கையால் கட்டளையிடப்பட்டது. அந்த சந்ததி கிறிஸ்துவே. இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லை. அப்படியாக கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தாலே நாம் நீதிமான்கள் ஆக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாயிருந்தது. விசுவாசம் வந்த பின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்கள் அல்ல என்றே வேதம் சொல்லுகிறது.

‘நியாயப்பிரமாணத்தை அழிப்பதற்கு அல்ல, நிறைவேற்றவே வந்தேன்’ என்று சொன்ன இயேசு கிறிஸ்து பாவம் செய்யவில்லை; அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலது பாரிசத்திலே இருக்கிறார்; தேவ தூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது என்று Iபேதுருவில் சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு ஓய்வு நாள் கட்டளையில் பாவம் செய்திருந்தாரேயானால், அவர் உயிர்த்தெழுந்திருக்கவும் முடியாது, பரலோகத்திற்கு செல்லவும் முடிந்திருக்காது அல்லவா?

மேலும், ‘முதலாம் உடன்படிக்கை பிழை இல்லாதிருந்ததேயானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே’ என்றும், ‘அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலை நிற்கவில்லையே’ என்றும், ‘புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார், இரண்டாவதை நிலை நிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப் போடுகிறார்’ என்றும் நியாயப்பிரமாணம் மாற்றப்பட்டதைக் குறித்து வேதத்தில் பல இடங்களில் பார்க்கிறோம்.  இயேசு பழைய நியாயப்பிரமாணத்தை நீக்கிவிட்டு புது நியாயப்பிரமாணங்களைத் தருவார் என்பது முன்பே தேவனால் தீர்மானிக்கப்பட்ட விஷயம். இதை எரேமியாவில் காணலாம். அப்போஸ்தலர் நடபடிகள் 6:14 வசனமும் இதை உறுதிப்படுத்துகிறது.

ஆச்சாரிய ஊழியம், பலி செலுத்துதல், விருத்தசேதனம் போன்றவற்றை இயேசு மாற்றினது போல, பத்து கட்டளைகளில் உள்ள ஓய்வு நாள் கட்டளையோடு கொலை செய்யாதிருப்பாயாக, விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காயாக என்ற கட்டளைகளையும் அவர் எப்படியாக மாற்றினார் என்பதை மத்தேயு ஐந்தாம் அதிகாரத்தில் பார்க்கிறோம். நாம் ஓய்வு நாள் கட்டளையைக் கைக்கொள்வதாக இருந்தால் பலி செலுத்துதல், விருத்தசேதனம் போன்ற கட்டளைகளையும் கடைப்பிடிக்கவேண்டுமே! அவற்றைக் கடைப்பிடிப்பதில்லையே!

பவுல் சொல்கிறார், ‘கிறிஸ்து கொடுத்தப் பிரமாணங்கள் மையினால் அல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும், கற்பலகைகளில் அல்ல, இருதயங்களாகிய சதையானப் பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது. புது உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாய் இருக்கிறது. எழுத்துக் கொல்கிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.

எழுத்துக்களினால் எழுதப்பட்டு கற்களில் பதிந்திருந்த மரணத்திற்கேதுவான ஊழியத்தை செய்த மோசேயின் முகத்தை இஸ்ரவேல் புத்திரர் பாராதபடிக்கு மோசே போட்டுக்கொண்ட முக்காடு பழைய ஏற்பாடு வாசிக்கையில் நீங்காமல் இருந்தது. அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது இந்நாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே. அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுக்கப்பட்டுப்போம்’.

நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனி கொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவர்களானீர்கள். நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே வேலை பெலன் செய்தது.

இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படி அல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியம் செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்திற்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கின்றோம். கிறிஸ்து நம்மை நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நீங்கலாக்கியிருக்க அந்த நியாயப்பிரமாணத்திற்கு மீண்டும் அடிமையாகி நாம் ஏன் சாபத்திற்குள்ளாக வேண்டும்?

நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடித்த இஸ்ரவேலரைக் குறித்து, ‘நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே. நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை. இடறுதற்கானக் கல்லில் இடறினார்கள். தேவனைப் பற்றி அவர்களுக்கு வைராக்கியம் உண்டென்று அவர்களைக் குறித்து சாட்சி சொல்கிறேன். ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியம் அல்ல. அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுய நீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்’ என்று சொன்ன பவுல், விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் என்று சொல்வதோடு, ‘சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாம்’ என்றும் சொல்லியிருக்கிறார். ஆக, இயேசு நியாயப்பிரமாணத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்க அதை நாம் தொடருவதென்பது அது நமக்குப் பாவமாகும்.

ஏனெனில், தேவதூதர் மூலமாய் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்த செய்கைக்கும், கீழ்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய் கவனிக்க வேண்டும்.

வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது, அவை சத்திய வசனங்கள் என்பதை அறிந்திருக்கிற நாம் அந்த சத்தியத்தை மாற்றாமல் கடைப்பிடிப்பதனால் மட்டுமே பரலோகம் செல்ல முடியும். பரிசுத்த ஆவி போதிக்கிறப்படி நடவாமல் மனுஷ ஞானம் (எலான். ஜி. வைட்) போதிக்கிற வார்த்தைகளைப் பேசி அதன்படி நடக்கிறவர்களாக நாம் இருந்தோமானால் வேதத்தைப் புரட்டுகிற பொய்யராக இருந்து அக்கினியும், கந்தகமும் எரிகிறக் கடலிலே தான் பங்கடைவோம். சத்தியத்தை விட்டு எப்படியாவது நம்மை வழி விலக செய்து நாம் தேவனை அடையாதபடிக்கு பிசாசு செய்யும் தந்திரங்களில் சிக்கிகொள்ளாமல், நாம் அவனால் வஞ்சிக்கப்படாமல் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

வேதபாரகர், பரிசேயர் போன்றோர் நியாயப்பிரமாணத்தை, அது கொடுக்கப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றினதினாலேயே இயேசுவைக் குற்றம் சாட்டினர். வேதத்தைப் புரிந்துகொள்ளாததாலேயே இயேசுதான் மேசியா என்பதை உணராமல் யூதர்கள் அவரைக் கொலை செய்ய ஒப்புகொடுத்தனர் என்பதை நாம் மறக்கக்கூடாது.

ஜென்ம சுபாவ மனுஷன் தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான், ஆவிக்குரியவனோ எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான் என்று வேதம் கூறுகிறபடியே நாம் ஆவிக்கேற்றப் பிரகாரமாய் ஆராய்ந்து நிதானித்து தேவன் காட்டிய ஒரே வழியான ஜீவ வழியில்  நடந்து மீட்புப் பெறுவோம்.


[இந்த தொகுப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள வேத வசனங்கள்]

யாத்திராகமம் 23:12; எரேமியா 31:32,33; கொலோசெயர் 2:14,16; லூக்கா 13:10-17; மத்தேயு 12:1,2,7,8; 5:20; எபிரெயர் 7:19; Iதீமோத்தேயு 1:8-11; கலாத்தியர் 3:19,24,25;2:15; மத்தேயு 5:17; Iபேதுரு 2:22,3:22; எபிரெயர் 8:7,9,13;10:9; IIகொரிந்தியர் 3:3,6,7,14-16 ; Iகொரிந்தியர் 4:6 ; எபிரெயர் 2:1,2 ; Iகொரிந்தியர் 2:13-16; ரோமர் 9:30-32;10:2-4; மேலும் படிக்க: கலாத்தியர் 3:10-19, 5:18; ரோமர் 8:1-4; எபிரேயர் 9:15; ரோமர் 7:4-6;


– சகோதரி எமீமாள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s