சிலை வழிபாடு ஏன் கூடாது?

நம் பாரத நாட்டில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக உள்ளனர். அவர்களுடைய வழிபாடு விக்கிரக வழிபாடாக இருக்கிறது. ஆரம்பக் காலங்களில் சில உருவங்களை மட்டுமே வணங்கி வந்த மக்கள் காலம் செல்ல செல்ல இறந்தவர்களையும், உயிரோடு இருக்கிறவர்களையும், வணங்க ஆரம்பித்தனர். தற்காலத்திலோ வரைமுறையே இல்லாமல் தெருவில் எக்குத் தப்பாக நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு கல்லானாலும் அதற்கு கோயில் எடுத்து அதை வணங்கும்படியான மனப்போக்கு உள்ளது. நன்கு படித்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் கூட இப்படி செய்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்.

அதுமட்டுமல்லாமல், ஆறறிவு உள்ள மனிதன் ஐந்தறிவு உள்ள மிருகங்களையும் வணங்குகிறான். தான் செய்கிறது இன்னதென்று அவன் உணரவில்லை. இந்த விஷயத்தைப் பகுத்தறியாததால் கண்மூடித்தனமானப் பழக்கவழக்கங்களுக்கு ஆளானான்; அதற்கு அடிமையும் ஆனான்.

தம்முடைய சாயலாக மனிதனை சிருஷ்டித்த தேவன், ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க அவற்றை தெய்வமென வணங்குவது எப்படி விவேகமானதாக இருக்கமுடியும்? மனிதன் தன்னால் செய்யமுடியாத காரியங்களை இந்த ஜந்துக்கள் செய்யும் என்று நம்புவது அவனுடைய அறியாமையையே குறிக்கிறது.

மேலும், வாகனங்கள், பாத்திரங்கள், ஆயுதங்கள், விளைபொருட்கள் என மனிதர்கள் தான் படைத்த எல்லாவற்றையும், மரங்கள், மலர்கள் உள்பட தேவனால் படைக்கப்பட்ட எல்லாவற்றையும் வணங்குகிறார்கள். இதையே வேதம், ‘அழிவில்லாத தேவனுடைய மகிமையை, அழிவுள்ள மனிதர்கள் பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல், சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்’ என்று கூறுகிறது.

ஆதியிலே, தேவன் சொன்னது என்னவென்றால், ‘என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம்’ என்பதே. மேலும், ‘தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்’ என்று பரிசுத்த வேதாகமமும் சொல்கிறது. இந்துக்களின் வேதங்களில் ஒன்றாகிய யஜூர் வேதமும், ‘கடவுளுக்கு உருவமில்லை; அவர் பரிசுத்தர்’ என்றும், ‘ஜீவனுள்ள தேவனை மறுத்து, கைகளினால் செய்யப்பட்ட, கண்களினால் காணத்தக்கதான உருவங்களை வணங்குபவர்கள் பயங்கரமான நரகத்திற்கு செல்வார்கள்’ என்றும் கூறுகிறது. (யஜூர்வேதம் 40:8,9)

தன்னுடைய அளவற்ற அறிவினால் வேறு கோள்களுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி ஆராய்கிற மனிதன், தெய்வம் என்று வரும்போது தன் செயல்களை ஆராய்ந்து அறியாமல், மூடப் பழக்கவழக்கங்களில் நம்பிக்கை கொண்டு அவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறான். உண்மை தெய்வம் எது என்பதை அறிந்துகொள்ளாததினால் அவனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தேவன் சொல்கிறார்:

‘மனிதன் தனக்கென ஒரு மரத்தை நடுகிறான், மழை அதை வளரச் செய்யும். மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பை மூட்டி அப்பமும் சுடுகிறான்; அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியை சமைத்துப் புசித்து, பொரியலைப் பொரித்துத் திருப்தியாகி, குளிரும் காய்ந்து; ஆ ஆ, அனலானேன், நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி, அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரக தெய்வமாக செய்து, அதற்கு முஎன் விழுந்து, அதை வணங்கி, நீ என் தெய்வம் என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.

அறியாமலும், உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. மரத்தில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதன் தழலின் மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும், சொரணையும் இல்லை.

விக்கிரகத்தைத் தோளின் மேல் எடுத்து, அதை சுமந்து, அதை அதன் ஸ்தானத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தை விட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறு உத்தரவு கொடுக்கிறதுமில்லை; அவன் இக்கட்டை நீக்கி, அவனை இரட்சிக்கிறதுமில்லை.’

தேவன் சொன்னது போல தான் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை என்பதை மனிதன் உணர்வது எப்போது? அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும் என்று வேதம் சொல்கிறது.

சித்தர்கள் பலரும் தங்கள் பாடல்களில் சிலை வழிபாடு கூடாது, அப்படி செய்கிறவர்கள் எரிநரகில் வீழ்வார்கள் என்று வலியுறுத்தியுள்ளனர். சிலையை வழிபடுவது மதியீனம் என்றும், இந்துக்களால் கடவுள் என்று சொல்லப்படுபவைக் கடவுள் அல்ல என்றும் பாடியுள்ளனர். இதை அகஸ்தியர் ஞானம், முக்தி வழி, பட்டினத்தார் பாடல்கள், கௌதம விருத்தம், பாம்பாட்டி சித்தர் பாடல்கள், திருமந்திரம், சிவ வாக்கியர் சித்தர் பாடல்கள், திரு அந்தாதி, திரு.வி.க.வின் சிவன் அருள் வேட்டல் கடந்த நிலை இன்னும் பல பல சித்தர் பாடல்களில் காணலாம்.

அதே போல், சூரிய, சந்திரனை அடையாளங்களுக்காகவும், காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் உண்டாக்கின தேவன், ‘வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர, சூரிய, நட்சத்திரங்களைத் தொழுது சேவிக்க இணங்காதீர்கள்’ என்று எச்சரித்தும் உள்ளார். மாறாக, சூரிய, சந்திரனை வழிபட்டு அதைப் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கமும் நம் மக்களிடயே உள்ளது.

இன்னமும், அறியாமையில் உள்ள ஜனங்கள் தங்கள் பிரச்சினைகளுக்குக் காரணத்தைத் தெரிந்துகொள்ளவும், அவற்றிற்கு தீர்வு தேடியும் குறி கேட்பது, அஞ்சனம் (மை) பார்ப்பது போன்ற பழக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். இதையே, ‘உயிருள்ளவர்களுக்காக செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?’ என்று தேவன் கேட்கிறார். யார் வேண்டுமானாலும் நடந்த சம்பவங்களை சொல்லலாம், ஒருவருடைய பாவ சாபங்களைப் பற்றி சொல்லலாம். ஆனால், பாவநிவர்த்தி என்ற பெயரில் செய்யும் எந்த ஒரு காரியத்தினாலும் பாவ, சாபங்களிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்ள முடியாது, தேவன் ஒருவரால் மட்டுமே அவற்றிலிருந்து விடுதலை தர முடியும்.

        மனிதன் தான் செய்த துர்க்கிரியைகளுக்குப் பரிகாரமாக நதியில் குளிப்பதினாலும், யாத்திரை செய்வதினாலும், தர்மம் செய்வதினாலும் தனக்கு இரட்சிப்புக் கிடைக்கும் என்று நம்புகிறான். ஆனால், இவற்றினாலெல்லாம் இரட்சிப்பு உண்டாகாது என்று சிவ கீதை சொல்கிறது. இது தவிர, ஆடு அல்லது கோழியை பலியாகக் கொடுப்பதையும் பாவத்திற்குத்தக்கப் பரிகாரமாகக் கருதுகிறார்கள். இது குறித்து, ‘அவர்கள் தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்கள்’ என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. காரணம், மனிதனாகப் பிறந்த இயேசு கிறிஸ்து நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக தன் குற்றமற்ற இரத்தத்தை சிந்தி, தன்னையே பலியாகத் தந்து நம் எல்லோரையும் மீட்டுக் கொண்டார். இனி செலுத்துவதற்கு வேறொரு பலி தேவையில்லை. மீறி செலுத்தப்படும் பலிகள் நன்மை தராது; மாறாக, தீமையையே விளைவிக்கும்.

‘மனுக்குல மீட்பென்பது தெய்வத்தின் வழியாகத்தான் வரும்’ என்று சாமவேதம் சொல்கிறது. இதையே, ‘பாவத்தைப் போக்க இரத்தம் சிந்தப்பட வேண்டும். கடவுளே தன்னை பலியாகத் தருவதின் மூலம் இரத்தத்தை சிந்துவார்’ என்று கூறியுள்ளது. மேலும், பலியாகத் தரப்படும் விலங்கு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென்று பத்து அம்சங்களை ரிக் வேதம் சொல்லியுள்ளது. அந்த பத்து அம்சங்களும் இயேசுவின் விஷயத்தில் நிறைவேறியது. அவரே பரிகாரி!

ஒருமுறை பெரிய ஊழியக்காரர் ஒருவர் வெளிநாடுகளுக்கு சென்று ஊழியம் செய்யும்பொழுது, அந்த நாடுகளின் செழிப்பைக் கண்டு, ‘இந்த நாட்டு மக்கள் வளமாக வாழ்கிறார்கள், என் நாட்டு மக்கள் ஏழையாக இருக்கிறார்களே, ஆண்டவரே!’ என்று ஆதங்கத்துடன் தேவனிடத்தில் கேட்டப்பொழுது, ‘அவர்கள் துன்மார்க்கத்தில் இருக்கிறார்களே’ என்று தேவன் பதிலளித்ததாக அந்த ஊழியக்காரர் சொன்னார். ஆக, நாம் இந்த மூட நம்பிக்கைகளையும், மூடப் பழக்கவழக்கங்களையும் விட்டு, உணர்வடைந்து, விவேகமாக செயல்படும்பொழுது நாமும் வளமாக வாழலாம். அதற்கு முதலில் நாம் சில விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது:

நம்மைப் படைத்தவரை வணங்காமல், நாம் படைத்தவற்றை வணங்கலாமா? என்று நமக்குள் ஒரு கேள்வி எழ வேண்டும். நம்மை நம்மால் காப்பாற்றிக் கொள்ளமுடியாதபொழுது, நாம் உருவாக்கினவை நம்மை எப்படி காப்பாற்றும்? ஒரு சிறு தாவரமாகிய புல்லைக்கூட நம்மால் முளைக்கப் பண்ண முடியாதபொழுது, அல்லது தண்ணீரின்றி அது உலர்ந்து போனால், வாடிப் போனால் அதற்கு மீண்டும் உயிர் தர நம்மால் முடியாதபோது, நாம் கல், மண் இவைகளைக் கொண்டு உருவாக்கின தெய்வங்கள் என்று சொல்லப்படுவனவற்றில் எப்படி உயிர் இருக்கும்? என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்; அறியாமை நீங்கும்.

பரிசுத்த வேதாகமம் கூறுகிறது:

‘உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும், பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. எல்லோருக்கும் ஜீவனையும், சுவாசத்தையும், சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானது போல, மனுஷர் கைகளால் பணிவிடை கொள்கிறதுமில்லை.

மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்க செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும், அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். கர்த்தராகியத் தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படி செய்தார். தேவன் யூதருக்கு மாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.’

அவர் அந்நியக் கடவுள் இல்லை, உலக மக்கள் எல்லோருக்கும் அவர் ஒருவரே தேவன். பரிசுத்த வேதாகமம் கூறுவதை நம்பாதவர்கள் சாமவேதம்  கூறுவதை கவனியுங்கள்:

‘உலகத்தை இரட்சிக்க இறைவன் பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியாகவும் வெளிப்பட்டு, வானத்திற்கும், பூமிக்கும் நடுவே உபத்திரவப்பட்டு சபையை இரட்சிப்பார்.’ (உத்ராக்ஷஹ காண்டம் 6-ஆம் அதிகாரம், 7-ஆவது வாக்கியம்)

சஹஸ்ர நாமாவளி இயேசு கிறிஸ்துவை ஒப்புக்கொண்டுள்ளது:

  1. ஓம் ஸ்ரீ பிரம்ம புத்திராய நமஹ:
    சிருஷ்டிகர்த்தாவின் புத்திரரே, போற்றுகிறோம்.
    [தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனைத் தந்தருளி…உலகத்தில் அன்பு கூர்ந்தார் – யோவான் 3:16]
  1. ஓம் ஸ்ரீ தரித்திர நாராயணாய நமஹ:
    ஏழைக் குலத்தில் அவதரித்தவரே, போற்றுகிறோம்.
    [அவர் ஐஸ்வரியம் உள்ளவராய் இருந்தும்…உங்கள் நிமித்தம் தரித்திரர் ஆனாரே – IIகொரிந்தியர் 8:9]
  2. ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ:
    கன்னியின் கர்ப்பத்தில் பரிசுத்தமாய் பிறந்தவரே, போற்றுகிறோம்.
    [இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதி ஆகி ஒரு குமாரனைப் பெறுவாள்… – மத்தேயு 1:23]
  1. ஓம் ஸ்ரீ உமாத்யாய நமஹ:
    பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே, போற்றுகிறோம்.
    [பரிசுத்த ஆவி உன்மேல் வரும்…உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும் – லூக்கா 1:35]
  1. ஓம் ஸ்ரீ ஸிபிலிஷ்டாய நமஹ:
    தன்னுடைய மாமிசத்தில் வெளிப்பட்டவரே, போற்றுகிறோம்.
    [தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்… – Iதீமோத்தேயு 3:16]
  1. ஓம் ஸ்ரீ விதிரிஷ்டாய நமஹ:
    விருத்தசேதனம் செய்து கொண்டவரே, போற்றுகிறோம்.
    [பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே…அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள் – லூக்கா 2:21]
  1. ஓம் ஸ்ரீ அஜமுகாய நமஹ:
    செம்மறி ஆடு முகமானவரே, போற்றுகிறோம்.
    [உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி – யோவான் 1:29]
  1. ஓம் ஸ்ரீ விருக்ஷ சூல அருதாய நமஹ:
    சூலம் போன்ற மரத்தில் பலியானவரே, போற்றுகிறோம்.
    [மனுஷ குமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக் கொடுக்கப்படுவார் – மத்தேயு 26:2]
  1. ஓம் ஸ்ரீ மிருத்யும் ஜெயாய நமஹ:
    மரணத்தை வென்றவரே, போற்றுகிறோம்.
    [அவர் தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் – மத்தேயு 28:6]
  2.  ஓம் ஸ்ரீ மஹா தேவயாய நமஹ:
    தேவர்களுக்கெல்லாம் தேவனே, போற்றுகிறோம்.
    [கர்த்தர் பெரியவர்…எல்லா தேவர்களுக்கும் மேலானவர் – சங்கீதம் 135:5]

தமேவம் வித்வனாம்ருத இஹ பவதி நன்ய பாண்டா அயனய வித்யதே

இந்த மனிதரை தியானித்து ஏற்றுக்கொண்டு உள்ளத்திலே விசுவாசித்து நாவினால் அர்ச்சித்தால் இந்த உலகத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இரட்சிப்பிற்கு வேறு மார்க்கம் இல்லை.

இந்து வேதங்களில் உள்ள சில முக்கியமான பிரார்த்தனைகளுக்கு இயேசு தரும் பதில்:

  1. உண்மையல்லாதவற்றிலிருந்து உண்மையை நோக்கி எங்களை வழி நடத்தும்.
    ‘நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்’ (யோவான் 14:6)
  2. இருளிலிருந்து வெளிச்சத்திற்கு எங்களை வழி நடத்தும்.
    ‘நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்’ (யோவன் 8:12)
  1. மரணத்திலிருந்து நித்தியஜீவனுக்குள்ளாக எங்களை வழி நடத்தும். (ப்ருஹத் ஆரண்ய உபநிஷதம் 6,7,8)
    ‘என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்கு உட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்’ (யோவான் 5:24)
  1. நான் பாவியாக இருக்கிறேன்; நான் பாவம் செய்கிறவனாக இருக்கிறேன்; பாவம் செய்கிற ஆவி என்னில் இருக்கிறது; நான் பாவத்தில் பிறந்திருக்கிறேன். தன்னை சரணடைந்தவர்களிடத்தில் அன்பு காட்டுகிறக் கருணையுள்ள தெய்வமே! உம்மைத் தவிர எனக்கு வேறு புகலிடம் இல்லை. (மனுஸ்மிருதி அத்தியாயம் 2)
    • ‘அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்’ என்று கர்த்தருடைய தூதன் சொன்னான். (மத்தேயு 1:21)
    • ‘பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்’ (மாற்கு 2:17)
    • ‘அவருடைய குமாரனாகிய இயேசு கிறஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும்’ (Iயோவான் 1:7)

இந்துக்களில் அனைவருமே தங்களுடைய வேதத்தை அறிந்திருக்கவில்லை; அறிந்தவர்கள் அதன் உண்மையான பொருளை புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டிருந்தால் தேவன் யார் என்பதை உணர்ந்திருப்பார்கள். ஏனென்றால், அவர்களுடைய வேதங்களில் பொதுவாகக் கடவுள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர கடவுளுக்குப் பெயர் குறிப்பிடப்படவில்லை. காரணம், தேடலின் மூலம் கடவுள் என்று ஒன்று உண்டு என்பதைத் அறிந்துகொண்ட அவர்கள் கடவுள் யார் என்பதை அறிந்திருக்கவில்லை.

தேவன் தனக்கெனத் தெரிந்துகொண்ட இஸ்ரவேல் ஜனங்கள் அல்லாத புறஜாதி ஜனங்களை ஆசீர்வதிக்க மனதாயிருக்கிறார். அவர்கள் விஷயத்தில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பது குறித்து தேவன் ‘என் உடன்படிக்கையைப் பற்றிக் கொண்டிருக்கிற அந்நிய புத்திரர் அனைவரையும் நான் என் பரிசுத்தப் பர்வதத்திற்குக் கொண்டுவந்து, என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப் பண்ணுவேன்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்’ என்கிறார்.

வருங்காலத்தில் அநேக ஜனங்களும், பலத்த ஜாதிகளும் கர்த்தரைத் தேடவும், அவருடைய சமூகத்தில் விண்ணப்பம் பண்ணவும் வருவார்கள். அந்நாட்களில் தேவனுடைய பிள்ளைகளிடத்தில், ‘தேவன் உங்களோடே இருக்கிறார் என்று அறிகிறோம். ஆகையால் உங்களோடே கூட வருவோம்’ என்று சொல்லி அவர்களைப் பற்றிக் கொள்வார்கள் என்று வேதத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது, அது இப்பொழுதே நிறைவேறி வருகிறது.

நியாயத்தீர்ப்பு நாளிலே விக்கிரக ஆராதனைக்காரர்களுக்குத் தரப்படும் தீர்ப்பு:

‘விக்கிரக ஆராதனைக்காரர் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை’

‘பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபச்சாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரக ஆராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும், கந்தகமும் எரிகிறக் கடலிலே பங்கடைவார்கள்’ என்று வேதம் சொல்லுகிறது.

இது வெறும் பயமுறுத்தல் இல்லை; வேதம் தேவனால் அருளப்பட்டது; வேத வாக்கியங்கள் எல்லாம் சத்தியம். சத்தியத்தை அறிந்துகொள்பவர்களை சத்தியம் விடுதலையாக்கும். நாம் நமது மரணத்திற்குப் பிறகு எங்கே செல்வோம்? யாரிடம் செல்வோம்? என்று ஒரு கணம் யோசித்துப் பார்ப்பது நல்லது.

தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது:

நன்மை இன்னதென்று தேவன் நமக்கு அறிவித்திருக்கிறார்; நியாயம் செய்து, இரக்கத்தை சினேகித்து, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே எதையும் கர்த்தர் நம்மிடத்தில் கேட்கவில்லை. நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திர வேலையினாலும், யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.

அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார், இப்பொழுதோ மனம் திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லோருக்கும் கட்டளையிடுகிறார். மேலும், ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக் கொண்டு பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதாலே அதன் நிச்சயத்தை எல்லோருக்கும் விளங்கப் பண்ணினார். அதாவது, மனிதனாகப் பிறந்து, சிலுவையில் மரித்துப் பின் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து இந்த பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.

தேவன் பட்சபாதமுள்ளவரல்ல; எந்த ஜனத்திலாயினும் அவருக்கு பயந்திருந்து நீதியை செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன். ஆதலால், துன்மார்க்கன் தன் வழியை விட்டு கர்த்தரிடத்தில் திரும்பக் கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; அவர் மன்னிக்கிறதற்கு தயை பெருத்திருக்கிறார்.

இறுதியாகமனிதர்கள் மேல் மனதுருகுகிற தேவன் சொல்லுவது என்னவென்றால்:

‘நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். ஆடுகளுக்காக நான் என் ஜீவனையும் கொடுக்கிறேன். இந்த தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டு வர வேண்டும். அவைகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனும் ஆகும்.

நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன். ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற் போனால், அவனை நான் நியாயம் தீர்ப்பதில்லை. என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது. நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும்.’

இனி நாம் செய்யவேண்டியது என்னவெனில்:

கர்த்தராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. ஆகையால், கர்த்தரே தேவன் என்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார். நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.

நாம் நம்முடைய வழிகளை சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம். இம்மைக்காக மாத்திரமல்ல மறுமைக்காகவும் தான். அப்பொழுது நரகத்திற்கு தப்புவிக்கப்படுவோம்.

கிறிஸ்தவம் என்பது மதமல்ல; இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கும் ஒரு அடையாளச்சொல் மாத்திரமே. உலகத்தில் மதம் என்று ஒன்று இல்லை. ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று திருமூலரின் திருமந்திரம் சொல்கிறது. உலக மக்கள் நாம் எல்லோரும் ஒரே குலம்; நமக்கு தேவன் ஒருவரே. நாம் எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்வோம்.


[இந்த தொகுப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள வேத வசனங்கள்: (வரிசைப்படி)]

ஆதியாகமம் 1:28; ரோமர் 1:23,25; யாத்திராகமம் 20:3-5,23; யோவான் 4:24; ஏசாயா 44:14-19,46:7; எரேமியா 10:14,15; ஏசாயா 8:19; ஆதியாகமம் 1:14; உபாகமம் 4:19; Iகொரிந்தியர் 10:20; அப்போஸ்தல நடபடிகள் 17:24-27; ரோமர் 3:29; ஏசாயா 56:6,7; சகரியா 8:22,23; Iகொரிந்தியர் 6:9,10; வெளிப்படுத்தின விசேஷம் 21:8; யோவான் 8:32; மீகா 6:8; அப்போஸ்தல நடபடிகள் 17:29-31,10:34,35; ஏசாயா 55:7; யோவான் 10:9-11,15,16; எசேக்கியேல் 33:11; யோவான் 12:47,48; அப்போஸ்தல நடபடிகள் 4:12; சங்கீதம் 100:3; புலம்பல் 3:40,41; Iதெசலோனிக்கேயர் 5:21.

நன்றி: இந்து வேதக் கருத்துக்கள் – சாது செல்லப்பா, சித்தர் பாடல்கள் – சகோ. தாயப்பன்.


– சகோதரி எமீமாள்

3 thoughts on “சிலை வழிபாடு ஏன் கூடாது?

  1. நல்லது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக. இயேசு கிறிஸ்துவை இரட்சகர் என்று உலகில் உள்ள அனைத்து நாவுகளும் அறிக்கையிட நாம் தேவனை நோக்கி மன்றாடுவோமாக.

    Like

    • நம் தேசம் தேவனுடைய ஆளுகைக்கு கீழ் வரவேண்டியும் நாம் ஜெபிப்போம்.

      இந்த வலையில் உள்ள பதிவுகளை தாங்கள் சந்திக்கும் நபர்களிடம் பகிரவும். தங்களது ஊழியத்திற்கு பயன்படும் விதத்தில் ஒவ்வொரு ஜனத்திற்கு ஏற்றவாறு சில தலைப்புகளில் தொகுப்புகள் உள்ளன. கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பாராக!

      Like

Leave a comment