கத்தோலிக்க ஜனங்களுக்கு

தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு, அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கின்படி ஒரு தேசத்தைக் கொடுப்பதற்காக, அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த பொழுது, அத்தேசத்திலே அவர்கள் கடைபிடிக்கும்படியாக பத்துக் கட்டளைகள் கொடுத்தார். அதில் முதலாம் கட்டளை, ‘என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்’ என்பதே.

கத்தோலிக்கத்தில் கர்த்தரைக் காட்டிலும் மரியாளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் மூலம் தேவன் கொடுத்த முதல் கட்டளையே மீறப்பட்டுள்ளது. இயேசுவைப் பெற்றது மரியாள் தானே, அதனால் நாங்கள் மரியாளை ஆராதிக்கிறோம் என்று சிலர் சொல்கிறார்கள்; சிலர் இயேசுவிற்கு சமமாக மரியாளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இயேசுவால் மரியாளுக்கு மகிமையா? அல்லது மரியாளால் இயேசுவிற்கு மகிமையா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இயேசு இந்த பூமியில் பிறப்பதற்கு மரியாள் ஒரு கருவியே தவிர, காரணகர்த்தா அல்ல. மரியாள் நம் எல்லோரையும் போல குடும்ப வாழ்க்கையில் ஈடுப்பட்டு சாதாரண மனித வாழ்க்கை வாழ்ந்து மரித்தவர். ஆனால், இயேசுவோ பரிசுத்த ஆவியால் பிறந்து, பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, நமக்காகத் தம் ஜீவனையே தந்து, மரித்துப் பின் உயிரோடெழுந்து, இன்றளவும் ஜீவனோடு இருக்கிற தேவன்.

இயேசுவை மரியாளின் குமாரன் என்று வேதம் அடையாளம் காட்டவில்லை, மாறாக தாவீதின் குமாரன் என்று தான் சொல்லி இருக்கிறது. தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியம் செய்த பின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான். தேவனால் எழுப்பப்பட்ட இயேசுவோ அழிவைக் காணவில்லை. இவர் மூலமாகவே நமக்கு பாவ மன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சமயம், இயேசுவின் தாயாரும், சகோதரரும் அவரிடத்தில் பேசுவதற்காக வந்திருக்கிறார்கள் என்று அவரிடத்தில் அறிவிக்கப்பட்டப்பொழுது இயேசு, ‘என் தாயார் யார்? என் சகோதரர் யார்?’ என்று சொல்லி, தன் சீஷர்களைக் காட்டி, ‘என் தாயும், என் சகோதரர்களும் இவர்களே. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான்’ என்று சொல்லி, பிதாவையே கனப்படுத்தினார், தன் தாய்க்கு முக்கியத்துவம் தரவில்லை.

‘நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்’ என்று சொன்ன இயேசு, ‘ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவையும், பிதா அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்’ என்றும் சொல்கிறார். அதாவது இயேசுவின் வழியாக மட்டுமே பிதாவை அடையமுடியும். வேதமும் ‘அவராலேயன்றி (இயேசு) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை’ என்று கூறுகிறது.

அடுத்து, ‘யாதொரு சுரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம், நீ அவைகளை நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம்’ என்ற இரண்டாம் கட்டளையில் சுரூப வழிபாடுக் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ‘கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை. ஆகையால், நீங்கள் உங்களைக் கெடுத்துக் கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும், யாதொரு உருவுக்கும் ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதப்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்’ என்று மோசே கூறியிருக்கிறார்.

‘நான் கர்த்தர், இது என் நாமம். என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்’ என்று கர்த்தர் சொல்லியிருக்க, சுரூப வழிபாடு செய்து தேவனுடைய கட்டளையை மீறி நடப்பது நமக்குப் பாவமாகும். விக்கிரக ஆராதனைக்காரர் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை. அவர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினியும், கந்தகமும் எரிகிறக் கடலிலே பங்கடைவார்கள் என்று வேதம் சொல்லுகிறது.

மேலும், அந்தோணியார், சவேரியார் போன்ற புனிதர்களை வணங்குகிறார்கள். அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்தபொழுது பரிசுத்தமாக வாழ்ந்தவர்கள். மற்றப்படி, மரியாளானாலும், அந்தோணியார் போன்ற புனிதர்கள் ஆனாலும், மனிதர்களாகப் பிறந்து மனிதர் முறைமையின்படியே மரித்து அடக்கம் பண்னப்பட்டவர்கள். மனிதர்களைக் குறித்து தேவன், ‘நீ மண்ணாய் இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்’ என்று சொல்லியிருக்க, மரித்தவர்களை வணங்குவது தேவ கோபாக்கினைக்கு ஏதுவாகும். இதையே வேதம் ‘தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழாமல், சிருஷ்டியைத் தொழுது கொள்கிறார்கள்’ என்று சொல்கிறது.

அடுத்ததாக, முன்னோர்களையும், மரித்தப் பெற்றோர்களையும் நினைவுக்கூர்கிறோம், மரியாதை செய்கிறோம் என்று சொல்லி, கல்லறைக்கு தூப, தீபம் காட்டுகிறார்கள். ‘உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே, பூமியில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக’ என்பது தேவன் கொடுத்த ஐந்தாம் கட்டளையாக இருக்கிறது. அதன்படி, பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்பொழுதுதான் கனம் பண்ணவேண்டுமே தவிர மரித்த பின்பு அல்ல. மரித்த பின்பு நாம் செய்கிற சடங்குகளோ, அவர்களுக்காக தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணுவதோ அவர்களைப் போய் சேராது. ‘மரித்தவனுக்காக அழ வேண்டாம், அவனுக்காகப் பரிதவிக்கவும் வேண்டாம்’ என்று கர்த்தர் சொல்கிறார். ஜீவனுள்ள தேவனை மகிமைப்படுத்துவதை விட்டுவிட்டு, மரித்தவர்களை வணங்குவது தேவனை அவமதிக்கிற செயலாகும்.

இவ்வாறு, தேவன் கொடுத்தக் கட்டளைகள் எவ்வளவாக மீறப்பட்டுள்ளது. தேவன் இந்த கட்டளைகளையெல்லாம் கொடுத்தப்பொழுதே அவற்றை கடைப்பிடித்தால் வரும் ஆசீர்வாதங்களையும், கட்டளைகளை மீறினால் வரும் சாபங்களையும் சொல்லியிருக்க (உபாகமம் 28) நாம் அதை உணர்ந்து நடந்தால் தேவனுடைய சாபத்திற்கு நீங்கலாவோம்.

மேலும் சிலர் குறி கேட்பது, நாள் பார்ப்பது போன்ற இந்துக்களின் பழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள். ‘இவற்றையெல்லாம் நீங்கள் செய்யாதிருங்கள், இவற்றை தேவன் அருவருக்கிறார். குறி சொல்பவர்கள் சொன்னது நடந்தாலும் நம்பாதிருங்கள். நீங்கள் உங்கள் தேவனிடத்தில் முழு இருதயத்தோடு அன்புகூருகிறீர்களா இல்லையா என்று அறியும்படிக்கு தேவன் உங்களை சோதிக்கிறார்’ என்று மோசே சொல்லியுள்ளார்.மனாசே என்கிற யூதராஜா இந்த அருவருப்புகளைத் தானும் செய்து யூத ஜனங்களையும் பாவம் செய்யப் பண்ணினதால் கர்த்தருடைய கோபம் யூத ஜனங்கள் மேல் மூண்டது. தேவன் அவர்களைக் கைவிட்டார்.

‘கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும், தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்’ என்றும், ‘என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்’ என்றும் இயேசு கூறுகிறார். நமக்கு வேண்டியது இன்னதென்று கர்த்தர் அறிந்திருக்கிறார். நாம் விசுவாசத்தோடுக் கேட்கும்பொழுது கேட்டதை நாம் பெற்றுக்கொள்ளலாம். தேவன் சொன்ன வழிகளை விட்டு அவர் வெறுக்கிறக் காரியங்களை செய்யும்பொழுது, இப்படிப்பட்டவைகளின் நிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவ கோபாக்கினை வரும் என்று வேதம் சொல்லுகிறது.

தேவன் நமக்கு நன்மை உண்டாகப் பின்பற்றும்படியாக அவரது வழிகளை நமக்கு வேதத்தின் மூலம் தந்திருக்கிறார். சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றும் கூறுகிறார். அந்த சத்தியத்தை சொல்லித் தரும் வேதத்தை நாம் முறையாக வாசிக்காததால் தேவனுடைய வழிகளை நாம் முழுமையாக அறிந்துகொள்ளாதிருக்கிறோம்.

‘என் வேதத்தின் மகத்துவத்தை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள்’ என்று தேவன் சொல்லுகிறார். ‘வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது’ என்று நீதிமொழிகள் சொல்லுகிறது.

பொதுவாக, ஜனங்கள் அவரவர் தங்கள் நாட்டின் சட்டத்திற்கு பயந்து அதற்கு கீழ்படிந்து நடக்கிறார்கள். அவ்வாறு நடக்கவில்லை என்றால் அரசாங்கம் இரக்கம் காட்டாது, அபராதம் போடும், சிறையில் தள்ளும் என்பதால் அதற்குக் கட்டுப்படுகிறார்கள். ஆனால், தேவனுடைய சட்டத்தைக் குறித்து பயங்கொள்ளாததினால் அதை மீறுகிறார்கள். தேவன் இரக்கமுள்ளவர் ஆகையால் தேவனுடைய சட்டத்தை மீறுகிறவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும்பொழுது தேவன் அவர்களை மன்னிக்க மனதாயிருக்கிறார். உணராமல் இருந்தாலோ நியாயத்தீர்ப்பு நாளிலே நாம் தேவனுக்கு  பதில் சொல்லியாக வேண்டும். ‘நீங்கள் கோபாக்கினையின் நிமித்தம் மாத்திரமல்ல, மனசாட்சியின் நிமித்தமும் கீழ்ப்படிய வேண்டும்’ என்று பவுல் அடிகளார் சொல்லுகிறார்.

‘நாமெல்லோரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லோருடைய அக்கிரமத்தையும் அவர் (இயேசு) மேல் விழப்பண்ணினார்’ என்று ஏசாயா கூறியுள்ளார்.அப்படியானால், நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக தேவன் தம் ஒரே பேறானக் குமாரனை பலியாகத் தருவார் என்பது தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விஷயம். அப்படியாக, ஒரு பாவத்தை  நிவர்த்தி செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட  காரியத்திலேயே மீண்டும் நாம் பாவம் செய்வோமானால், அந்த பாவத்தினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனி இராமல், நியாயத்தீர்ப்பும், கோபாக்கினையுமே இருக்கும். ஆதலால் கர்த்தரே தேவன் என்று அறிந்து நாம் தேவனை மகிமைப்படுத்தி,  தேவனிடத்தில் மன்னிப்புப் பெற்று மீட்படைவோமாக!


[இந்த தொகுப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள வேத வசனங்கள்: (வரிசைப்படி)]

யாத்திராகமம் 20:3 ; அப்போஸ்தல நடபடிகள் 13:36-38 ; மத்தேயு 12:46-50 ; யோவான் 14:6, 17:3 ; அப்போஸ்தல நடபடிகள் 4:12 ; யாத்திராகமம் 20:4,5 ; உபாகமம் 4:15-18 ; ஏசாயா 42:8 ; Iகொரிந்தியர் 6:9,10 ; வெளிப்படுத்தின விசேஷம் 21:8 ; ஆதியாகமம் 3:19 ; ரோமர் 1:25 ; எபேசியர் 6:2,3 ; யாத்திராகமம் 20:12 ; எரேமியா 22:10 ; உபாகமம் 18:9-12, 13:1-3 ; IIஇராஜாக்கள் 21:6,11 ; யோவான் 14:14  ; மத்தேயு 7:7, 6:8 ; எபேசியர் 5:5,6 ; ரோமர் 13:5 ; எபிரெயர் 10:26,27


– சகோதரி எமீமாள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s