கடவுள் மறுப்புக் கொள்கை

 

வானாதி வானங்களையும் பூமியையும் ஒரு வார்த்தையாலே உண்டாக்கிய கர்த்தர் அதிலுள்ள சகலத்தையும் நேர்த்தியாக செய்து வைத்தார். சகலத்தையும் நேர்த்தியாக செய்த தேவன் மனுஷனையும் செம்மையானவனாக உண்டாக்கினார். ஆனால், மனிதர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தங்களுக்குத் தேடிக்கொண்டார்கள். ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் மனிதர்கள் அறியாதிருக்கிறது போலவே, அண்டசராசரத்தையும் இயக்குகிற தேவனுடைய செயல்களையும் அவர்கள் அறியவில்லை.

ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும் யுத்தத்திற்கு சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐஸ்வரியம் அடைகிறதற்கு புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும், தேவச்செயலும் நேரிடவேண்டும் என்று வேதம் சொல்கிறது. இதை நம்பலாம், நம்பாமல் இருக்கலாம். ஆனால் நம்பவில்லை என்பதற்காக இது உண்மையல்ல என்று மறுக்க முடியாது.

சிலர் தங்களுக்கு காரியங்கள் எளிதாக நடக்கிறது என்பதாலும், சிலர் தங்களுக்கு காரியங்கள் எதுவும் நன்மையாக நடக்கவில்லை என்பதாலும் கடவுள் என்று எதுவும் இல்லை என்றும் காரியங்கள் எல்லாம் தானாக நடக்கின்றன என்றும் நினைக்கிறார்கள்.

உலகில் எந்த ஒரு இயக்கத்திற்கும் ஏதாவது ஒரு சக்தி தேவை என்பதை அறிந்தவர்கள், அந்த சக்தியை உண்டாக்கி இயக்குகிறது தெய்வ சக்தி என்பதை உணராமல் தங்களை பகுத்தறிவாளர்களாக எண்ணிக் கொள்பவர்களும் உண்டு. எல்லாவற்றையும் பகுத்தறிகிற இவர்கள் இந்த உண்மையை ஏன் பகுத்தறிய முடியவில்லை என்றால் அவர்கள் உண்மையை உணர மறுத்து கடவுள் நம்பிக்கையை மூட நம்பிக்கை என்றும் தங்களை அறிவாளிகளென்றும் கருதிகிறார்கள்.

கடவுள் நம்பிக்கை எப்பொழுது மூட நம்பிக்கை ஆகிறதென்றால் கல்லினாலும், மண்ணினாலும் நாமே சிலைகள் செய்து, அது நம்மைக் காப்பாற்றும் என்று எண்ணி அதை வணங்கும்போது தான். ஆனால் நம்மைப் படைத்த தேவனை இனங்கண்டு வணங்கும்போது, அது நமக்குப் பாதுகாப்பாகவும், திடநம்பிக்கையாகவும் ஆகிறது.

தேவன் மீது நம்பிக்கை இல்லாமல் தங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களைப் பார்த்து கர்த்தர் கேட்கிறார்:

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?

நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு. வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே? அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?

நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை அவ்வளவு பெரிதோ? உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிலிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ? ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.

வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே? பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி, பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி, வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்? உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்?

ஜலம் கல்லுருவங்கொண்டு மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே. அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ? இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?

வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ? ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள் பரியந்தம் உயர்த்துவாயோ? நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்லும்படி செய்வாயோ? அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்? ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?

காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்? வரையாடுகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ? அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, அவைகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? அவைகள் நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு, தங்கள் வேதனைகளை நீக்கிவிடும். அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, அவைகளண்டைக்குத் திரும்ப வராமற்போய்விடும்.

காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்? அதற்கு நான் வனாந்தரத்தை வீடாகவும், உவர்நிலத்தை வாசஸ்தலமாகவும் கொடுத்தேன். அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை. அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, சகலவிதப் பச்சைப்பூண்டுகளையும் தேடித்திரியும்.

உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்குக்கு எதிராகத் தன் செட்டைகளை விரிக்கிறதோ? உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ?

தேவன் சொல்கிறார்:

என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ!

பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்.

நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்.

ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

அறியாமையில் உள்ளவர்களே! உணர்வடையுங்கள்!

தேவன் உண்டென்று நம்பாமலிருக்கிற நீங்கள் உங்கள் சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கிறீர்கள். இது அனுக்கிரக காலம். கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். நிச்சயம் பதில் பெறுவீர்கள். மனுஷன் தன் காலத்தை அறியான். நாளை தனக்கு என்ன நேரும்? மரணம் எப்பொழுது சம்பவிக்கும்? மரணத்திற்கு பின் என்ன நடக்கும்? எதையும் மனுஷன் அறியான். அதை அறிந்தவர் தேவன் ஒருவரே.

நீங்கள் புனிதராக இருந்தால் தேவன் உங்களுக்கு புனிதராக இருப்பார். நீங்கள் மாறுபாடு உள்ளவராக இருந்தால் அவர் உங்களுக்கு மாறுபடுகிறவராகவே தோன்றுவார். எல்லாவற்றையும் சோதித்து அராய்ந்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். விசுவாசிக்கிற நீதிமான் பிழைப்பான்.


– சகோதரி எமீமாள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s